உலக கோப்பை தொடரில் வலுவான இரண்டு அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

இந்திய அணி இதுவரை ஒரு தோல்வி கூட அடையாத நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது இங்கிலாந்து அணி. 

இரு வலிமையான அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தங்கள் அனி முதலில் பேட்டிங் ஆடுவதே சிறந்தது என கருதிய இயன் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்தார். ஏனெனில் இதற்கு முன்னர் ஆடிய போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடியபோதெல்லாம் கஷ்டப்படாமல் வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து அணியால், இலங்கைக்கு எதிராக எளிய இலக்கை கூட விரட்டமுடியவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியிடமும் இலக்கை விரட்ட முடியாமல் தோற்றது. 

எனவே முக்கியமான போட்டியில் அதுவும் நல்ல பவுலிங் யூனிட்டை கொண்ட இந்தியாவுக்கு எதிராக சேஸிங் செய்வதை விட முதலில் பேட்டிங் ஆடுவதுதான் நல்லது என்பதால் இயன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முக்கியமான போட்டி என்பதால் இலக்கை விரட்டும் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்கிற வகையில் இந்த முடிவு நல்ல முடிவுதான். 

அதேநேரத்தில் டாஸ் தோற்ற பின்னர் பேசிய விராட் கோலி, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டாஸ் வென்றால் நாங்களும் முதலில் பேட்டிங் ஆடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனாலும் ஒரு பிரச்னையுமில்லை. எங்களுக்கு இலக்கை விரட்டுவது ரொம்ப பிடிக்கும் என்று தைரியமாகவும் மகிழ்ச்சியுடனும் கூறினார் கோலி. 

இந்திய அணி பொதுவாகவே இலக்கை விரட்டுவதில் சிறந்த அணி. அதிலும் கேப்டன் விராட் கோலி இலக்கை விரட்டுவதில் வல்லவர். அந்த விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர். டாஸ் தோற்றாலும் இலக்கை விரட்டுவது எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்கிற ரீதியில் செம கெத்தாக, எதிரணிக்கு பீதியை கிளப்பும் வகையில் பேசினார்.