இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனியும் கேதரும் ஆடிய மந்தமான பேட்டிங் தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவருகிறது. 

பிர்மிங்காமில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறியதால், அடுத்த விக்கெட்டையும் உடனே இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோஹித்தும் கோலியும் அந்த பணியை சரியாக செய்தனர். 

அதனால் முதல் 10 ஓவர்களில் அவர்களால் பெரிதாக அடித்து ஆடமுடியாத காரணத்தால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்து கோலியும் சதமடித்து ரோஹித்தும் ஆட்டமிழந்த பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவைத்தான் அணி நம்பியிருந்தது. அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

ஆனால் கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்காமல் அவுட்டாகிவிட்டனர். கடைசி ஓவர்களில் தோனி மிரட்டுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த 5 ஓவர்களில் எந்த சூழலிலும் அடித்து ஆட முயலவே இல்லை. 

கடைசி 30 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவை. அதை அடிப்பது கடினம் தான் என்றாலும் முயற்சி செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் முயலவே இல்லை என்பதுதான் பிரச்னை. இங்கிலாந்து பவுலர்கள் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி அதிகமான ஸ்லோ டெலிவரிகளை வீசி கட்டுப்படுத்தினர். அவர்கள் எவ்வளவு கடினமாக வீசினாலும் பவுண்டரி அடிப்பதற்கான வழியை தேடி முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறும் முனைப்பே இல்லாமல் இருவரும் ஆடினர். 

இது அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங்கை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

ஆனால் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அவர்களின் மந்தமான இன்னிங்ஸை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, தோனி பெரிய ஷாட் ஆட தீவிரமாக முயற்சி செய்தார் என்றே நினைக்கிறேன். ஆனால் பந்து அந்தளவிற்கு வசதியாக பேட்டிற்கு வரவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் சரியான ஏரியாக்களில் பந்துவீசினர். பந்து நின்று வந்தது, எனவே கடைசி ஓவர்களில் பேட்டிங் ஆட மிகவும் கடினமாக இருந்தது என்று கோலி தெரிவித்தார். 

அணியின் சீனியர் வீரர் என்பதற்காகவே அவரது அனைத்து செயல்களையும் நியாயப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. தோனியும் சரி கேதரும் சரி அடித்து ஆட முயற்சிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.