அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், நேபால் ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடின. 

இந்த தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறின. இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுமே சரியாக ஆடாததால் 32.4 ஓவரில் வெறும் 106 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய அர்ஜுன் ஆசாத், இறுதி போட்டியில் இரண்டே பந்தில் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான சுவேத் பர்க்கார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் த்ருவ் ஜுரேல் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில், ஷேஷ்வாத் ராவத், வருண் லாவண்டே, அதர்வா அன்கோல்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 33 ரன்களில் கேப்டன் த்ருவ் ஜுரேலும் ஆட்டமிழந்தார். கரன் லால் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து கொடுத்தார். அவர் 37 ரன்களை சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இந்திய அணி வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. ஆனால் வங்கதேச அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலிருந்தே இந்திய பவுலர்கள் வீழ்த்த தொடங்கிவிட்டனர். என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, அந்த அணி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே வங்கதேச அணியின் முதல் 4-5 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. 

வங்கதேச அணியின் டாப் ஆர்டர்களை ஆகாஷ் சிங் விரைவில் வீழ்த்திவிட, மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்களை அதர்வா அன்கோல்கர் வீழ்த்திவிட்டார். 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 101 ரன்களுக்கே ஆல் அவுட்டாகிவிட்டது. வங்கதேச அணி 78 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் 9வது விக்கெட்டுக்கு ரகிபுல் ஹசன், டன்சிம் ஹசன் ஷகிப்பும் இணைந்து 23 ரன்களை சேர்த்தனர். 

32 ஓவரில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணிக்கு, வெற்றிக்கு வெறும் 8 ரன்களே தேவைப்பட்டது. அதர்வா வீசிய 33வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள்கள் எடுக்கப்பட்டன. 101 ரன்களை எட்டிவிட்ட வங்கதேச அணியின் வெற்றிக்கு வெறும் 6 ரன்களே தேவைப்பட்டது. ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. ரகிபுல் - டன்சிம் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டினர். ஆனால் மூன்றாவது பந்தில் டன்சிமின் விக்கெட்டை வீழ்த்திய அதர்வா, அந்த ஓவரின் கடைசி பந்தில் கடைசி வீரரான ஷாஹின் ஆலமை வீழ்த்திவிட்டார். இதையடுத்து 101 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டானதால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வென்றது.