காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் முதல் முறையாக இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த்தில் முதல் முறையாக நடக்கும் மகளிர் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் ஆடிவருகின்றன. பர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிங்க - WI vs IND: முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி! சீனியர் வீரர் கம்பேக்.. அவங்க 2 பேரில் ஒருவர்.. அது யார்?
இந்திய மகளிர் அணி:
ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், மேக்னா சிங், ரேணுகா சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வெர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 33 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களை விளாசினார். 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹர்மன்ப்ரீத் கௌர் 34 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க - WI vs IND: வெஸ்ட் இண்டீஸை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை
ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வெர்மாவின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 154 ரன்கள் அடித்த இந்திய மகளிர் அணி, 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
