உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து விலகியுள்ளது.
WCL 2025: India Refuses To Play Pakistan In Semi Finals: ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) 2025 தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பிரபலமான பல்வேறு முன்னாள் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் நாளை மோத இருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துள்ள இந்திய சாம்பியன்ஸ் அணி உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2025 தொடரில் இருந்தே விலகியுள்ளது.
பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்துள்ளது. பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுடன் ஏற்கெனவே இரு நாட்டு தொடர்களில் இந்திய அணி விளையாடுவது கிடையாது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டின் கிரிக்கெட் உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.
பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2025 லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணி ஏற்கெனவே பாகிஸ்தானுடன் விளையாட மறுத்திருந்தது. ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா என முன்னாள் வீரர்கள் பலர் பாகிஸ்தானுடன் விளையாட முடியாது என்று கூறியிருந்தனர்.
இதனால் அந்த போட்டியே ரத்து செய்யப்பட்டது. இப்போது பாகிஸ்தானுடன் அரையிறுதியிலும் இந்திய அணி விளையாட மறுத்ததுடன் மட்டுமின்றி தொடரில் இருந்தும் வெளியேறி இருக்கிறது. அரையிறுதியில் இந்தியா விளையாடதாதால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இந்திய அணி வீரர்கள் உறுதியாக உள்ளனர். ஏற்கெனவே பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி இருந்தது. இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை.
பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்தது. அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் கைப்பற்றியது. இதேபோல் பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் வந்து விளையாட மாட்டோம் என முடிவெடுத்துளது. இதனால் இந்தியாவில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாயில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
