இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

இந்நிலையில், கடைசி போட்டி மவுண்ட் மாங்கனியில் இன்று நடக்கிறது.  இந்த போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில் ஒரேயொரு வெற்றியையாவது பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது. 

இந்த போட்டியில் கேப்டன் கோலி ஆடவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடுகிறார். டாஸ் வென்ற ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலிக்கு பதில் ரோஹித் ஆடுகிறார். இதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. 

ரோஹித் சர்மா அணியில் இருந்தாலும் கூட, கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். இதை ரோஹித் சர்மாவே, டாஸ் போட்ட பின்னர் உறுதி செய்தார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆட தொடங்கியதற்கு(2013ம் ஆண்டு) பின்னர், அவர் அணியில் இருக்கும்போது, மற்றொரு வீரர் தொடக்க வீரராக இறங்குவது இதுதான் முதன்முறை. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சாஹல், சைனி, பும்ரா. 

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியிலும் ஆடவில்லை. டிம் சௌதியே இந்த போட்டிக்கும் கேப்டனாக செயல்படுகிறார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது. 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டாம் ப்ரூஸ், மிட்செல் சாண்ட்னெர், டேரைல் மிட்செல், இஷ் சோதி, டிம் சௌதி(கேப்டன்), குஜ்ஜெலின், பென்னெட்.