ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.  

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் மந்தமாக தொடங்கினர். இருவரில் ஒருவர் கூட அதிரடியாக ஆடவில்லை. ராகுல் 46 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்தார். 68 பந்துகள் பேட்டிங் ஆடிய ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய ஷுப்மன் கில் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இஷான் கிஷன் அரைசதம் அடித்து 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட்டிங் ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்த ஷுப்மன் கில் 130 ரன்களை குவித்தார். கில்லின் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது இந்திய அணி.

290 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியில் சீனியர் வீரர் சிக்கந்தர் ராஜா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்த சிக்கந்தர் ராஜா 115 ரன்கள் அடித்து 49வது ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவரில் 276 ரன்கள் அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஜிம்பாப்வே அணி.

இதையும் படிங்க - ஒரே சதத்தில் ரோஹித் சர்மாவின் சாதனையையே தகர்த்த ஷுப்மன் கில்..! யுவராஜ் சிங், கோலிக்கு அடுத்த இடம்

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.