India vs Pakistan: மழையால் கைவிடப்பட்ட போட்டி; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி; ஏமாந்து போன ரசிகர்கள்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் கைவிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி நடந்தது. இதில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Asia Cup 2023, India vs Pakistan: தொடர்ந்து மழை பெய்தால், 20 ஓவர் போட்டிக்கு வாய்ப்பு!
இந்த நிலையில், தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. எனினும், போட்டியின் போதும், இரவு 7 மணிக்கு பிறகும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
எனினும் டாஸ் போடுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. டாஸ் வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டியின் 4.2 ஆவது ஓவரின் போதும், 11.2ஆவது ஓவரின் போதும் மழை குறுக்கீடு இருந்தது. எனினும், மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும், சுப்மன் கில் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷான் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக பும்ரா 16 ரன்கள் எடுக்கவே இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், 267 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட பாகிஸ்தான் விளையாட இருந்தது. ஆனால், தொடர்ந்து மழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியானது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அதோடு சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. இந்தியா 2ஆவது இடத்திலும், நேபாள் அணி 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.