இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன் பிறகு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது மொகாலியில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இன்றைய போட்டியின் மூலமாக கேஎல் ராகுல் 8ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். இந்திய அணியைப் பொறுத்த வரையில், இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலகக் கோப்பையை கருத்தி கொண்டு முகமது சிராஜிற்குப் பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுகிறார்.
இந்தியா:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், கேமரூன் க்ரீன், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மாத்யூ ஷார்ட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபாட், ஆடம் ஜம்பா.
டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் பவுண்டரி அடித்த நிலையில், முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னருடன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் டேவிட் வார்னர் தனது 29ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதோடு மட்டுமின்றி இன்றைய போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் 101 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
வார்னர் 52 ரன்கள் எடுத்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் 41 ரன்களில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து மார்னஸ் லபுஷேன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அது அவுட்டா? இல்லையா? என்று குழப்பத்தில் இருந்த நிலையில், மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். எனினும் இதற்கு ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து விமர்சனம் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் இருவரும் விளையாடி வருகின்றனர். ஒரு கட்டத்தில் 35.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 166 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. மொகாலியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மழை வருவதற்கான அறிகுறியுடன் அங்கு சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழந்துள்ளன. மேலும் அங்கு மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மழை நின்றதைத் தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
