2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா புதிய ஜெர்சியை வெளியிட்டார்.

2026 டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இந்த தொடரை நடத்துகின்றன. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் விளையாடுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் புதிய டி20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் இடைவேளையின்போது புதிய டி20 ஜெர்சி ராய்ப்பூரில் இன்று வெளியிடப்பட்டது. ஜெர்சி அறிமுகம் செய்யும் விழாவில் இந்திய வீரர் திலக் வர்மா, இந்திய வீரரும், 2026 டி20 உலகக்கோப்பை பிராண்ட் அம்பாசிடருமான ரோகித் சர்மா கலந்து கொண்டனர்.

சமகால வடிவமைப்பு

பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். இந்த புதிய ஜெர்சி, நவீன உயர் செயல்திறன் வடிவமைப்புடன், பழைய நினைவுகளைத் தூண்டும் அம்சங்களையும் கொண்டுள்ளது. 1990-களின் கோடுகள் போட்ட இந்திய ஜெர்சிகளின் உத்வேகத்துடன், ரெட்ரோ அம்சங்களுடன் கூடிய சமகால வடிவமைப்பு இதில் புகுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியின் புகழ்பெற்ற நெக்லைன் தக்கவைக்கப்பட்டுள்ளது என ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ரோகித் சர்மா பெருமிதம்

ஜெர்சி வெளியீட்டின் போது ரோஹித் சர்மா பேசுகையில், "ஒரு இளம் ரசிகனாக உற்சாகப்படுத்தியது முதல், நாட்டிற்காக கோப்பைகளை வென்றது வரை, இந்த விளையாட்டு எனக்கு வாழ்நாள் முழுவதும் நினைவுகளைத் தந்துள்ளது. இப்போது, நான் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழையும்போது, பெருமை அப்படியே இருக்கிறது. இந்த புதிய இந்திய அணி ஜெர்சி, நாம் மைதானத்தில் இருந்தாலும் சரி, பார்வையாளர் மாடத்தில் இருந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரே நிறத்தை அணிந்து, இந்தியாவிற்காக ஒரே கனவைக் காண்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது" என்றார்.