இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டியிலும் வென்று, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் ஒரேயொரு வெற்றியை பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்கின. 

இந்த போட்டியில் விராட் கோலி ஆடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடியது. கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் 2 ரன்னில் வெளியேறினார். 

இதையடுத்து ராகுலுடன் ரோஹித் ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா நிதானமாக ஆட, ராகுல் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து வெளுத்து வாங்கினார். ஆரம்பத்தில் அமைதிகாத்து, பந்துக்கு நிகராக ரன் எடுத்த ரோஹித் சர்மா, சாண்ட்னெர் வீசிய பத்தாவது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். அதற்கடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ரோஹித் சர்மா அதிரடியை தொடங்கிய மாத்திரத்தில் ராகுல் 33 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ரோஹித்துடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர், ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமல் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அதனால் அதிகமான பந்துகள் வீணாகின. இதையடுத்து அழுத்தம் அதிகரித்தது. அதேவேளையில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயத்தால் 60 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். 

இதையடுத்து களத்திற்கு வந்த ஷிவம் துபே இந்த போட்டியிலும் சொதப்பினார். அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கடைசி வரை பெரிய ஷாட்டுகளை அடிக்க முடியாமல் பந்துகளை அடிக்காமல் வீணடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 31 பந்தில் வெறும் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். மனீஷ் பாண்டே வெறும் 4 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 11 ரன்களை எடுத்ததால் இந்திய அணி 20 ஓவரில் 163 ரன்களை எட்டியது. 164 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடிவருகிறது.