தரம்சாலாவில் மாறி மாறி வான வேடிக்கை காட்டிய ரோகித், ஜெய்ஸ்வால் – முதல் நாளில் 135 ரன்கள் எடுத்த இந்தியா!
இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஜாக் கிராவ்லி மட்டுமே 79 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பென் டக்கெட் 27, ஜோ ரூட் 26, ஜானி பேர்ஸ்டோவ் 29 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்தார்.
இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவசரப்பட்டு அடிக்க முயற்சித்தி ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுப்மன் கில் களமிறங்கினார். இவரும், வந்ததும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
ஒரு புறம் தனது வானவேடிக்கையை காட்டிய ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் கடந்தார். அவர், 83 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.