தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. வரும் 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தாவில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய 3 நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடாத தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை பெற்றுவிட்டதால் இந்த தொடருக்கான அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் காயமடைந்ததால் அதன்பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடாத அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய மயன்க் அகர்வால் இந்த முறை அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார். தவான் மீண்டும் அணிக்கு திரும்பியதால் மயன்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். 

பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய இரண்டு இளம் வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஷுப்மன் கில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. பென்ச்சில்தான் இருப்பார். ஆனால் பிரித்வி ஷா, தவானுடன் தொடக்க வீரராக இறங்குவார். கேப்டன் கோலி தலைமையிலான இந்த அணியில் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, சாஹல், பும்ரா, சைனி, குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இந்த அணியில் ஷமி இல்லை. 

Also Read - நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்.