இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இந்திய அணியில் ரோஹித் மற்றும் அஷ்வினுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். மயன்க் அகர்வால் வெறும் 5 ரன்களில் கீமார் ரோச்சின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்திற்கு வந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவும் ஏமாற்றமளித்தார். வெறும் 4 பந்துகள் மட்டுமே ஆடி 2 ரன்கள் மட்டுமே அடித்து ரோச்சின் பந்தில் அவரும் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால் மற்றும் புஜாரா தான் ஏமாற்றமளித்தனர் என்றால், கேப்டன் கோலியும் ஏமாற்றமளித்தார்.

கோலியும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார். 9 ரன்களில் கேப்ரியலின் பந்தில் ஆட்டமிழந்தார். 25 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ராகுலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ராகுலும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக பேட்டிங் ஆடிவருகின்றனர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் அடித்து தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். ரஹானேவும் ராகுலும் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டியது அவசியம்.