சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிகள் பட்டியலில் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி முதல் இடம் பிடித்து அசத்தி உள்ளது.
ICC தரவரிசை பட்டியல்
ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர தரவரிசையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 126 ரேட்டிங் புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி 113 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 111 ரேட்டிங் புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும், 105 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறிய இங்கிலாந்து அணி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. மே 2024க்குப் பிறகு விளையாடிய அனைத்து போட்டிகளின் 100% மற்றும் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் விளையாடிய போட்டிகளின் 50% ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விளையாடிய நான்கு டெஸ்ட் தொடர்களில் மூன்றில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முழுமையான தோல்வியை சந்தித்ததும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்ததும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. டெஸ்ட் தரவரிசையின் முதல் 10 இடங்களில் வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. நியூசிலாந்து ஐந்தாவது இடத்திலும், இலங்கை ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் எட்டாவது இடத்திலும், வங்கதேசம் ஒன்பதாவது இடத்திலும் தொடர்கின்றன. ஜிம்பாப்வே பத்தாவது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் இந்தியா
ஒருநாள் தரவரிசையில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 109 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளைத் தொடர்ந்து எட்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. மேற்கிந்திய தீவுகள் ஒன்பதாவது இடத்திலும், வங்கதேசம் பத்தாவது இடத்திலும் உள்ளன.
ஆண்கள் டி20 தரவரிசையில் 271 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 262 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 254 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து (4), மேற்கிந்திய தீவுகள் (5), தென்னாப்பிரிக்கா (6), இலங்கை (7), பாகிஸ்தான் (8), வங்கதேசம் (9), ஆப்கானிஸ்தான் (10) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

