ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 116 புள்ளிகளுடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருந்தது. முதலிடம் பிடிப்பதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான் இந்தியா, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து வகையான ஃபார்மேட்டுகளிலும் முதலிடம் பிடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மொகாலியில் நடந்தது. இதில், இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நல்ல தொடக்க அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 142 ரன்கள் குவித்தது. இதில், கெய்க்வாட் 71 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 74 ரன்களில் வெளியேறினார். பின்னர் கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் யாதவ் 50 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 281 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 116 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து வகையான தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வரலாற்றில் 2வது இடம். இதற்கு முன்னதாக இது போன்று தென் ஆப்பிரிக்கா அணி கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து பார்மேட்டுகளிலும் நம்பர் 1 அணியாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பர் 1
டெஸ்ட், டி 20, ஒரு நாள் கிரிக்கெட்
நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் – சூர்யகுமார் யாதவ்
நம்பர் 1 ஒரு நாள் கிரிக்கெட் பவுலர் – முகமது சிராஜ்
நம்பர் 1 டெஸ்ட் பவுலர் – ரவிச்சந்திரன் அஸ்வின்
நம்பர் 1 டெஸ்ட் ஆல் ரவுண்டர் – ரவீந்திர ஜடேஜா
நம்பர் 2 டெஸ்ட் ஆல் ரவுண்டர் – ரவிச்சந்திரன் அஸ்வின்
நம்பர் 2 ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் – சுப்மன் கில்
நம்பர் 2 டி20 ஆ ரவுண்டர் – ஹர்திக் பாண்டியா
நம்பர் 3 டெஸ்ட் பவுலர் – ரவீந்திர ஜடேஜா
