ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி ரன் குவித்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் சதமடித்து அசத்த, முதல் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சூப்பரான நிலையில் உள்ளது. முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருக்கிறது. கேப்டன் ஷுப்மன் கில் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களைப் போலவே, கே.எல். ராகுலும் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்து, சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஷுப்மன் கில் புதிய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் 113 இன்னிங்ஸ்களில் 20 சதங்கள் அடித்துள்ளார். மற்றொரு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 74 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள் அடித்துள்ளார். முகமது அசாருதீன் 78 இன்னிங்ஸ்களில் 9 சதங்களும், சச்சின் டெண்டுல்கர் 43 இன்னிங்ஸ்களில் 7 சதங்களும் அடித்துள்ளனர். ஷுப்மன் கில், இந்திய டெஸ்ட் கேப்டனாக தனது 15வது இன்னிங்ஸில் 6வது சதத்தை பதிவு செய்துள்ளார். ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் தனது 5வது அரைசதத்தையும், ராகுல் தனது 12வது சதத்தையும் பதிவு செய்தனர்.
கேப்டனாக 1,000 ரன்களை கடந்த கில்
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக கேப்டனாக 1,000 ரன்களை கடந்த 11வது வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். சுனில் கவாஸ்கர் கேப்டனாக 14 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்தார். அவருக்கு அடுத்தபடியாக, கில் 15வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய கேப்டனாக பொறுப்பேற்ற 351 நாட்களில் இந்த சாதனையை கில் நிகழ்த்தியுள்ளார். போட்டியின் இரண்டாம் நாளில், கில் தனது ஸ்கோரையும், அணியின் ஸ்கோரையும் உயர்த்த முயற்சிப்பார். ரிஷப் பந்த் சதம் அடிக்க முயற்சிப்பார். இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய விரும்பாத அளவுக்கு பெரிய ஸ்கோரை குவிக்கவே திட்டமிடும்.


