நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா – இந்தியா புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம்!
நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் 2023 – 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை என்று 9 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் சதவிகிதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது வெஸ்ஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரோடு தொடங்கியது. இதில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் (1-0), தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 டெஸ்ட் (1-1) கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதையடுத்து தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதுவரையில் முடிந்த 8 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியும் டையிலும் முடிந்துள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2ஆவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்து முதல் இடத்தில் இருந்தது.
இந்த நிலையில் தான், இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தோல்வி அடைந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்திய அணி கடை டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்னரே, நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் சரிவை கண்ட நிலையில் இந்தியா 5 வெற்றிகளோடு பெர்சண்டேஜ் கணக்கின் படி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-0 என்று டி20 தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
புள்ளிப்பட்டியலின்படி,
இந்தியா – 64.58 சதவீதம்
நியூசிலாந்து - 60.0 சதவீதம்
ஆஸ்திரேலியா - 59.09 சதவீதம்
வங்கதேசம் – 50 சதவீதம்
பாகிஸ்தான் – 36.66 சதவீதம்
வெஸ்ட் இண்டீஸ் – 33.33 சதவீதம்
தென் ஆப்பிரிக்கா – 25.0 சதவீதம்
இங்கிலாந்து – 19.44 சதவீதம்
இலங்கை – 0 சதவீதம்