ஜிம்பாப்வே அணியை தலை தெறிக்க ஓட வைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் – இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியானது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதில், அபிஷேக் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் தங்களது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். முதல் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன் பிறகு தொடர்ந்து அதிரடி காட்டி விளையாடவே இந்தியா 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தங்கப் பதக்கம், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்!
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று கேப்டன் சுப்மன் கில் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணியானது ஹாட்ரிக் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்று கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
Zimbabwe vs India, 4th T20I: கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாடி 152 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே!