தங்க பதக்கம், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்!
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப்பில் பிரபல மணல் சிறப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்க பதக்கம் கைப்பற்றி கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் மணல் சிற்ப கலைஞர்களுக்கான சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் உள்பட 21 கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், பூரி ஜெகநாதரது தேர் மற்றும் கவிஞர் பக்தர் பலராம் தாஸின் சிற்பத்தை வடித்ததற்காக முதல் பரிசாக தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
மேலும், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்றுள்ளார். இது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியிருப்பதாவது: சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்றதில் ரொம்பவே சந்தோஷம். இதன் மூலமாக எனது மணல் சிற்ப கலை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஜெகநாத் மற்றும் மணல் கலை நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரது மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு இன்று நிறைவேறியது. மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று பெருமையோடு தெரிவித்துள்ளார்.