இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய முதல் டெஸ்ட் போட்டி இது. மேலும் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவும்(29) மயன்க் அகர்வாலும்(33) இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்கள் அடித்தார். 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியிடமிருந்து பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் ஆடி 97 பந்தில் 96 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதன்பின்னர் ஜடேஜாவும் அஷ்வினும் சேர்ந்து 130 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஷ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெயந்த் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஜடேஜா சதமடித்தார். 8வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஷமி, கவனமாக ஆட, மறுமுனையில் அடித்து ஆடிய ஜடேஜா 175 ரன்களை குவித்தார். இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். ஜடேஜா 175 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் 3ம் வரிசை வீரரான பதும் நிசாங்கா மட்டுமே அரைசதம் (61) அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஜடேஜாவின் பவுலிங்கில் சரணடைந்தனர் இலங்கை வீரர்கள். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, பவுலிங்கிலும் பட்டைய கிளப்பினார். 13 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பினர். 2வது இன்னிங்ஸில் டிக்வெல்லா மட்டுமே கடைசி வரை களத்தில் நின்று அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 2வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 2வது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவருமே தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை ஜடேஜா வென்றார்.