ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி.
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. ஹாமில்டனில் இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.
யஸ்டிகா பாட்டியா அபாரம்:
இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (30) மற்றும் ஷஃபாலி வெர்மா (42) ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கேப்டன் மிதாலி ராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
3ம் வரிசையில் இறங்கிய யஸ்டிகா பாட்டியா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களிலேயே அவர் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ரிச்சா கோஷ்(26), புஜா வஸ்ட்ராகர் (30), ஸ்னே ராணா (27) ஆகியோர் பங்களிப்பு செய்ய 50 ஓவரில் 229 ரன்கள் அடித்தது இந்திய மகளிர் அணி.
இந்திய மகளிர் அணி வெற்றி:
230 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 40.3 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
