மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, ஸ்பின்னர் பூனம் யாதவின் அபாரமான பவுலிங்கால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்டு ஆடியது இந்திய அணி. இந்த போட்டியில் மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா காய்ச்சல் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் அணியில் இடம்பெற்றார். 

பெர்த்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இல்லையென்றாலும், அவர் இல்லையென்ற குறையே தெரியாத அளவிற்கு அவருக்கும் சேர்த்து அடித்து ஆடினார் ஷஃபாலி வெர்மா. தொடக்கம் முதலே அடித்து ஆடிய அவர் பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசினார். 

வெர்மாவின் அதிரடியால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மற்றொரு தொடக்க வீராங்கனையான பாட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்த வெர்மா, 17 பந்தில் 39 ரன்களை விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்திவிட்டு சென்றார். அவர் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 5.3 ஓவரில் 53 ரன்கள். 

அதன்பின்னர் களத்திற்கு வந்ததில் ஜெமிமா மட்டுமே நன்றாக ஆடினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த போட்டியிலும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஜெமிமா பொறுப்புடன் ஆடி 34 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ் ஆகியோர் ஓரளவிற்கு ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்களை அடித்தது. 

143 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனை முர்ஷிதா காடுன் மற்றும் நிகர் சுல்தானா ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். முர்ஷிதா 30 ரன்களும் சுல்தானா 35 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இவர்களை தவிர வேறு யாருமே அந்தளவிற்குக்கூட ஆடவில்லை. 

பூனம் யாதவ், ஷிகா பாண்டே மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோரின் பவுலிங்கில் வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பூனம் யாதவின் சுழலில் ஆஸ்திரேலிய அணியே சிக்கி சீரழிந்தது என்றால், வங்கதேசத்தை சொல்லவா வேண்டும்? பூனம், அருந்ததி, ஷிகா ஆகியோரின் பவுலிங்கில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Also Read - அவரு வேலைக்கு ஆகமாட்டாரு.. அவர தூக்கிட்டு இவர சேருங்க.. ஜாம்பவனையே தூக்கிப்போட வலியுறுத்தும் முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை தேடிக்கொடுத்த பூனம் யாதவ், இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அருந்ததி மற்றும் ஷிகா பாண்டே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகியாக 17 பந்தில் 39 ரன்களை குவித்து இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்த ஷஃபாலி வெர்மா தேர்வு செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை லீக் சுற்றில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.