IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக ஆடினர். உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடித்தனர். கம்மின்ஸ் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஷமி 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நேதன் லயனிடம் சரணடைந்தது. ரோஹித் சர்மா(32), கேஎல் ராகுல்(17), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) மற்றும் கேஎஸ் பரத் (6) ஆகிய 5 வீரர்களையும் நேதன் லயன் வீழ்த்தினார். கோலி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 44 ரன்கள் அடித்தார். 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பின்னர் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். அஷ்வின் 37 ரன்கள் அடித்தார். மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 74 ரன்களை அடிக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை குவித்தது.
ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய லபுஷேன் 35 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திற்கு மளமளவென ஆட்டமிழந்தனர். ஜடேஜாவின் சுழலை சமாளிக்க முடியாமல் கவாஜா(6), லபுஷேன் (35), ஹேண்ட்ஸ்கோம்ப், கேரி, கம்மின்ஸ், லயன், குன்னெமன் ஆகிய 7 வீரர்கள் ஜடேஜாவின் சுழலில் அவுட்டாக, வெறும் 113 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 114 ரன்கள் முன்னிலை பெற, 115 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஒரு ரன் மட்டுமே அடித்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ஆனால் ரோஹித் சர்மா அடித்து ஆடி 20 பந்தில் 31 ரன்களை விளாசினார். அவரும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் விராட் கோலி(20) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்(12) ஆகியோரும் ஆட்டமிழக்க, புஜாராவும் கேஎஸ் பரத்தும் சேர்ந்து இலக்கை எட்டி போட்டியை முடித்து கொடுத்தனர்.
6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியிலும் ஜெயித்தால் இந்திய அணி தொடரை வென்றுவிடும். ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.