ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் குல்தீப் யாதவை எடுக்காமல் அக்ஸர் படேலை ஆடவைத்தது ஏன் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை வெறும் 177 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருட்டியது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது. ராகுல் (20), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார் யாதவ்(8), கேஎஸ் பரத் (8) ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடிவருகின்றனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா
இந்த போட்டியில் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் ஆடுவார்கள் என்பது தெரிந்ததுதான். அஷ்வின், ஜடேஜா ஆடுவது உறுதி என தெரிந்தது. ஆனால் குல்தீப் யாதவ் - அக்ஸர் படேல் ஆகிய இருவரில் யார் ஆடுவார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. கடைசியில் அக்ஸர் படேல் தான் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்டார். குல்தீப் யாதவ் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார்.
அக்ஸர் படேல் முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், பேட்டிங்கில் அரைசதம் அடித்து 52 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்நிலையில், குல்தீப் யாதவ் உட்காரவைக்கப்பட்டு, அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய விக்ரம் ரத்தோர், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டுமென்றால், ஒரு பவுலராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்க வேண்டும். அக்ஸர் படேலின் பேட்டிங் அவருக்கு போனஸ். பவுலிங்கும் மட்டுமல்லாது அக்ஸர் படேல் அருமையாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். 6 - 7 போட்டிகளில் மட்டுமே ஆடி 40க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அக்ஸர் படேல் என்று விக்ரம் ரத்தோர் கூறினார்.
