டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன் பேட்டிங்கிலும் அரைசதம் அடித்த ரவீந்திர ஜடேஜா, கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே இந்தளவிற்கு கூட ஆடாமல் மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு இந்த போட்டியில் கம்பேக் கொடுத்த ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது. ராகுல் (20), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார் யாதவ்(8), கேஎஸ் பரத் (8) ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடிவருகின்றனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது.
இந்த போட்டியில் பவுலிங்கில் 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, பேட்டிங்கிலும் அரைசதம் அடித்தார். ஜடேஜா 5வது முறையாக டெஸ்ட்டில் பவுலிங்கில் 5 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் அரைசதமும் அடித்துள்ளார். இதன்மூலம் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார். கபில் தேவ் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டும், அரைசதமும் அடித்திருக்கிறார். ஜடேஜா 5முறை இந்த சம்பவத்தை செய்து கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.