இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 2 பயிற்சி போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி, முதல் ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இன்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து ஏ அணி 48.3 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து ஏ அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. தொடக்க வீரர் ராச்சின் ரவீந்திரா 49 ரன்களும் கேப்டன் டாம் ப்ரூஸ் 47 ரன்களும் அடித்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் படேல் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

231 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 29 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரித்வி ஷா, அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். இரண்டாவது பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி 100 பந்தில் 150 ரன்களை குவித்த பிரித்வி ஷா, இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 

பிரித்வி ஷா 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து, 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கேப்டன் ஷுப்மன் கில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் சஞ்சு சாம்சனும் வேற லெவலில் அடித்து ஆடினர். நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடிய சஞ்சு சாம்சன், 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தார். 

பிரித்வி ஷா, சூர்யகுமார், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியால் 30வது ஓவரில் இலக்கை எட்டி இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.