ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்கான் ஆகா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது.
இந்தியா முதலில் பவுலிங்
இந்திய அணியை பொறுத்தவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்கள் அப்படியே களமிறங்குகின்றனர். பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை
ஓமனுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய அணியில் பாகிஸ்தானும் எந்த மாற்றமும் செய்யவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இன்றும் அவர் விளையாடவில்லை. டாஸ் வென்றாலும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருப்போம் என்று டாஸ் தோற்ற பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃபியான் முகீம், சுஃபியான் முகீம்.
மைதானத்தில் கூட்டம் இல்லை
சமீபத்திய மோதல்களின் பின்னணியில் மைதானத்திலும் சுற்றுப்புறத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் உற்சாகம் இந்த முறை ரசிகர்கள் மத்தியில் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு மைதானம் நிரம்பி வழியும் என்றாலும், இந்த முறை துபாய் சர்வதேச மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லாதது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கவில்லை
பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் இரு அணிகள் மோதினால் டாஸ் போட்ட பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இன்றைய போட்டியில் டாஸ் போட்டு முடித்த பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவும் கைகுலுக்கவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்களும் கைகுலுக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
