- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பை! வெறும் 5 ஓவரில் UAE கதையை முடித்த இந்தியா! மெகா வெற்றி! குல்தீப் யாதவ் மாஸ்!
ஆசிய கோப்பை! வெறும் 5 ஓவரில் UAE கதையை முடித்த இந்தியா! மெகா வெற்றி! குல்தீப் யாதவ் மாஸ்!
Asia Cup 2025, IND vs UAE: ஆசிய கோப்பையில் UAE அணியை வெறும் 57 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் பவுலிங்கில் கலக்கினார்.

Asia Cup 2025: India Beat UAE
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அந்த அணி அலிஷான் ஷரஃபு (17 பந்தில் 22 ரன்) ஆட்டமிழந்த பிறகு அப்படியே தடம்மாறியது.
குல்தீப் யாதவ் பந்தில் முடங்கிய பேட்ஸ்மேன்கள்
குல்தீப் யாதவ், ஷிவம் துபே ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினார்கள். குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ராகுல் சோப்ராவை (3) வெளியேற்றிய குல்தீப், நான்காவது பந்தில் கேப்டன் முகமது வசீமை அவுட்டாக்கினார். கடைசி பந்தில் ஹர்ஷித் கௌஷிக்கை (2) போல்டாக்கினார்.
57 ரன்களுக்கு ஆல் அவுட்
நீண்ட நாளுக்கு பிறகு பந்துவீசிய ஷிவம் துபேவும் யுஏஇ அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 13.1 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரக அணி வெறும் 57 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2.1 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும், பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அபிஷேக் சர்மா சிக்சர் மழை
பின்பு எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியில் வெளுத்துக் கட்டியது. தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மாவும், சுப்மன் கில்லும் அனுபவமில்லாத யுஏஇ அணியின் பந்துவீச்சை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினார்கள். அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிய, சுப்மன் கில் டிரேட் மார்க் ஷாட் மூலம் பவுண்டரிகளை ஓடவிட்டார். அதிரடியாக விளாசிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன் எடுத்து கேட்ச் ஆனார்.
இந்திய அணி அபார வெற்றி
பின்பு சூர்யகுமார் யாதவ்வும் சிக்சர் விளாச, இறுதியில் சுப்மன் கில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 4.3 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் (9 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்), சூர்யகுமார் யாதவ் (2 பந்தில் 7 ரன்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேஜிக் பவுலிங் மூலம் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆசிய கோப்பையில் இந்திய அணி தொடக்க ஆட்டத்திலேயே மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி வரும் 14ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.