- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பை: ஹாங்காங்கை அசால்ட்டாக ஊதித் தள்ளிய ஆப்கானிஸ்தான்! மெகா சாதனை வெற்றி!
ஆசிய கோப்பை: ஹாங்காங்கை அசால்ட்டாக ஊதித் தள்ளிய ஆப்கானிஸ்தான்! மெகா சாதனை வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Asia Cup 2025: Afghanistan vs Hong Kong
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்த நிலையில், செடிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்சாய் அதிரடியாக அரைசதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஒமர்சாய் சிக்சர் மழை
வெறும் 20 பந்தில் அரை சதம் விளாசிய ஒமர்சாய் 21 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 2017ல் அயர்லாந்துக்கு எதிராக முகமது நபி அடித்த 21 பந்து அரைசத சாதனையை ஒமர்சாய் முறியடித்தார். செடிகுல்லா அடல் 52 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடக்கத்திலேயே தடம்புரண்ட ஹாங்காங்
ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் குவித்த நிலையில், ஹாங்காங் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் தொடக்கம் முதலே அந்த அணி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. ஜீஷான் அலி 1 ரன்னிலும், அன்ஷி ராத் டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். நிஜகத் கான் (0), கல்ஹான் சல்லு (4) ஆகியோர் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்கள். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய மறுபக்கம் பாபர் ஹயாத் ஓரளவு சிறப்பாக விளையாடி 43 பந்தில் 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
பின்னர் வந்த கிஞ்சித் ஷா (6), ஐசாஸ் கான் (6) என வீரர்கள் களத்திற்கு வருவதும் உடனே அவுட்டாகி பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். 20 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி 9 விக்கெட் இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் சாதனை வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்புதீன் நைப், பரூக்கி தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான், நூர் அகமது, ஒமர்சாய், தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். அதிரடி அரைசதமும், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய அஸ்மதுல்லா ஒமர்சாய் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இரு அணிகளின் பீல்டிங் மோசம்
இந்த போட்டியில் இரு அணியின் பீல்டிங்கும் மிக மோசமாக இருந்தது. டி20 ஆசியக் கோப்பை வரலாற்றில் ஹாங் காங் அணி அதிகபட்சமாக ஐந்து கேட்ச்களை தவறவிட்டது. இதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் 2 கேட்ச்களை தவற விட்டது குறிப்பிடத்தக்கது.