ஆசிய கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் தொடக்க ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், ஹாங்காங் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்
தொடக்கத்தில் அந்த அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், இப்ராஹிம் சத்ரான் 1 ரன்னிலும் வெளியேறினார்கள். பின்பு வந்த முகமது நபி சிறிது அதிரடி காட்டினார். அவர் 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்பு வந்த குல்புதீன் நயிப்பும் (5 ரன்) நிலைக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட் விழ மறுபக்கம் தொடக்க வீரர் செடிகுல்லா அடல் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்சாய் சிக்சர் மழை பொழிந்தார்.
ஒமர்சாய் அதிவேக அரை சதம்
வெறும் 19 பந்தில் அரை சதம் விளாசிய ஒமர்சாய் ஒரே ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர் விளாசினார். தொடர்ந்து அவர் 21 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். செடிகுல்லா அடல் 52 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் குவித்தது. ஹாங்காங் தரப்பில் ஆயுஷ் சுக்லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹாங்காங் வெற்றி பெறுமா?
இந்த போட்டியில் ஹாங்காங் அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கைக்கு வந்த எளிய கேட்ச்களை கோட்டை விட்டனர். அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் ஆப்கானிஸ்தானை குறைந்த ரன்களில் மடக்கியிருக்கலாம். 189 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஹாங்காங் பேட்டிங் செய்கிறது.
