ஆசிய கோப்பையில் குல்தீப் யாதவ் மேஜிக் பவுலிங்கால் UAE அணி வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆசிய கோப்பை தொடரின் 2வது ஆட்டதில் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரக அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் ஜெயித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
நல்ல தொடக்கம் கண்ட UAE
அந்த அணி 3.4 ஓவர்களில் 26 ரன்கள் என ஓரளவு சிறப்பான தொடக்கம் அளித்தது. ஹர்திக் பாண்டியா வீசிய பவர் ப்ளேயின் முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை யுஏஇ அணியின் 22 வயது கேரள வீரர் அலிஷான் ஷரஃபு அளித்தார். பாண்ட்யா, பும்ரா ஓவரில் பவுண்டரிகள் விளாசிய அவர் அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு விரட்டியடித்தார். 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் ஷரஃபு பும்ராவின் சூப்பர் யார்க்கரில் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன உடன் ஐக்கிய அரபு அமீரக அணி அப்படியே தடம் புரண்டது.
குல்தீப் யாதவ் மேஜிக் பவுலிங்
அடுத்து முகமது சோஹைப் (2) வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் ஆனார். ஓரளவு சிறப்பாக விளையாடிய கேப்டன் முகமது வாசிம் (19) குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அந்த ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதாவது ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ராகுல் சோப்ராவை (3) வெளியேற்றிய குல்தீப், நான்காவது பந்தில் கேப்டன் முகமது வசீமை அவுட்டாக்கினார். கடைசி பந்தில் ஹர்ஷித் கௌஷிக்கை (2) போல்டாக்கினார்.
57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்
இந்த சரிவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக அணியால் மீள முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பந்துவீசிய ஷிவம் துபே, ஆசிஃப் கான் (2), துருவ் பராஷர் (1), ஜுனைத் சித்திக் (0) ஆகியோரை அவுட்டாக்கி பந்துவீச்சில் கலக்கினார். கடைசியில் ஹைதர் அலி (1) குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் ஆக 13.1 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரக அணி வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஷிவம் துபே பவுலிங்கில் கலக்கல்
அந்த அணியின் 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2.1 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும், பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
