ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே மற்றும் நியூசிலாந்து வீரரான ரிச்சர்டு ஹார்ட்லி உடன் இந்திய அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை ஒப்பிட்டு ஐஸ்லாந்து கிரிக்கெட் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து 254 ரன்கள் பின் தங்கியிருந்தது. தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி கூடுதலாக 258 ரன்கள் சேர்த்து மொத்தம் 512 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 36 வயதான அஸ்வின் 113 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் 3000 ரன்களை கடந்துள்ளார்.

இது குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் நியூசிலாந்தின் ரிச்சர்டு ஹார்ட்லி ஆகியோரை அஸ்வினுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது. அஸ்வினின் டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் (26.88). இது ரிச்சர்டின் பேட்டிங் ஆவரேஜை விட குறைவு. அதாவது, ரிச்சர்டு ஹார்ட்லி 27.16 பேட்டிங் ஆவரேஜ் கொண்டுள்ளார். இதே போன்று ஷேன் வார்னேயின் பௌலிங் ஆவரேஜ் 25.41 என்றும், அஸ்வினுக்கு 24.13 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், விக்கெட் எடுக்கவில்லை. 2ஆவது இன்னிங்ஸில் 14 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்துள்ளார். தற்போது வரையில் அவர் விக்கெட் எடுக்கவில்லை.