அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பொறுப்பான பேட்டிங்கால் 177 ரன்கள் அடித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88 ரன்களை குவித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் இந்திய அணி வெறூம் 177 ரன்கள் மட்டுமே அடித்தது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

முதன்முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், தலை கால் புரியாமல் கொண்டாடித்தீர்த்தனர் வங்கதேச வீரர்கள். போட்டி முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, வங்கதேச அணியின் வெற்றி உறுதியானதுமே, அந்த அணி வீரர்கள் பவுண்டரி லைனில் கொண்டாட தொடங்கினர். வின்னிங் ரன்னை அடித்தவுடன், மைதானத்திற்குள் புகுந்து தாறுமாறாக கொண்டாடினர். 

உலக கோப்பையை வெற்றியை கொண்டாடுவது அனைத்து அணிகளுமே செய்யக்கூடியதுதான். அதிலும் அண்டர் 19 வீரர்கள் என்பதால் அவர்கள் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடுவார்கள். ஆனால் பிரச்னை அதுவல்ல. வெற்றி கொண்டாட்டத்தில், தோல்வியடைந்த இந்திய வீரர்களை அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளை கூறி கிண்டலடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், வங்கதேச வீரர்களை பதிலுக்கு திட்ட, மைதானத்திலேயே மோதல் மூண்டது. 

இதைக்கண்ட அம்பயர்களும் பயிற்சியாளர்களும் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதற்கிடையே மைதானத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளே வந்து பிரச்னையை தீர்த்து, இரு அணி வீரர்களையும் அனுப்பிவைத்தனர். இரு அணி வீரர்களும் மைதானத்திலேயே மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மிகச்சிறப்பான போட்டி இதுமாதிரி அசம்பாவிதம் மற்றும் விரும்பத்தகாத சம்பவத்துடன் முடிந்தது அனைவருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த சண்டையில் ஈடுபட்ட 5 வீரர்களை தட்டி தூக்கிய ஐசிசி, அவர்களுக்கு டீமெரிட் புள்ளிகளை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அவர்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. 

Also Read - ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்கு அடுத்து ராகுல் செய்த சாதனை.. கோலியின் ரெக்கார்டை தகர்த்து அசத்தல்

வங்கதேச வீரர் தௌஹித் ஹ்ரிடாய் மற்றும் ஷமீம் ஹுசைன் ஆகிய இருவருக்கும் 6 டீமெரிட் புள்ளிகளும் ராகிபுல் ஹசனுக்கு 5 டீமெரிட் புள்ளிகளும் வழங்கியது. அதேபோல இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய இருவருக்கும் முறையே 7 மற்றும் 6 டீமெரிட் புள்ளிகளை வழங்கியுள்ளது.