கேஎல் ராகுல் கடந்த ஆண்டு டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஆட கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டதால், தற்போது ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலும் நிரந்தர இடத்தை பிடித்து அசத்தலாக ஆடிவருகிறார்.

டி20 அணியில் தொடக்க வீரராகவும், ஒருநாள் அணியில் ஐந்தாம் வரிசை வீரராகவும் இறக்கப்படுகிறார் ராகுல். ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் கூட, எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி சிறப்பாக ஆடக்கூடியவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையில் அசத்தலாக ஆடியதை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் ஐந்தாம் வரிசையிலேயே இறங்குகிறார். 

முதல் போட்டியில் அபாரமாக ஆடிய ராகுல் 88 ரன்களை குவித்தார். இரண்டாவது போட்டியில் சரியாக ஆடவில்லை. இந்நிலையில், இன்று மவுண்ட் மாங்கனியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 62 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 13வது ஓவரிலேயே ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேனான ராகுல் களத்திற்கு வந்துவிட்டார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், மனீஷ் பாண்டேவுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். டாப் ஆர்டர்கள் சொதப்பிய நிலையில், பொறுப்புடன் ஆடி சதமடித்த ராகுல், 112 ரன்களை குவித்து, இந்திய அணி 296 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார். 

ராகுலின் சாதனை பட்டியல்:

1. ஒருநாள் கிரிக்கெட்டில் இது ராகுலுக்கு 4வது சதம். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 4 சதங்களை குறைவான இன்னிங்ஸ்களில் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தவானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ராகுல். தவான் அவரது முதல் 4 சதங்களை 24 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அடித்துவிட்டார். கேஎல் ராகுல் தனது 31வது ஒருநாள் இன்னிங்ஸில் 4 சதங்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலியே ராகுலுக்கு அடுத்துத்தான் இருக்கிறார். கோலி 36 இன்னிங்ஸ்களிலும் கம்பீர் 44 இன்னிங்ஸ்களிலும் 4 சதங்களை அடித்துள்ளனர். 

2. அதேபோல், ஆசியாவிற்கு வெளியே சதமடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1999ல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தின் டவுண்ட்டனில் நடந்த போட்டியில் ராகுல் டிராவிட் சதமடித்துள்ளார். அதற்கு பிறகு இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் இப்போதுதான் ஆசியாவிற்கு வெளியே சதமடித்திருக்கிறார்.  

3. 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் 5ம் வரிசை அல்லது அதற்கு கீழ் இறங்கும் பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான். 2017ல் இங்கிலாந்துக்கு எதிராக தோனி பின்வரிசையில் இறங்கி சதமடித்தார். அந்த போட்டியில் தோனி 134 ரன்கள் விளாசினார். அதற்கு பின்னர் 5ம் வரிசை அல்லது பின்வரிசை வீரர் ஒருவர் இப்போதுதான் சதமடிக்கிறார். இந்த பெருமைக்கும் ராகுல் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 

ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுவதன்மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. அவருடன் ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடுவதால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதுடன், மிகச்சிறப்பாகவும் வலுவாகவும் உள்ளது மிடில் ஆர்டர்.