Sri Lanka Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கி ஐசிசி உத்தரவு!
இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஐசிசி அதிரடியாக நீக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், கடைசி நேரத்தில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இலங்கை விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் தான், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு உறுப்பினராக அதன் கடமைகளை மீறியுள்ளது, குறிப்பாக அதன் விவகாரங்களை தன்னாட்சி மற்றும் அரசாங்க தலையீடு இல்லாமல் நிர்வகிக்க வேண்டும்.
இடைநீக்கம் குறித்த நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியமானது அதிரடியாக கலைக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வி மற்றும் இந்தியாவிற்கு எதிராக மோசமான தோல்வி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியமானது அதிரடியாக கலைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளை ஐசிசி நீக்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்தது முதல், அதன் நடவடிக்கைகளை ஐசிசி கவனித்து வந்த நிலையில், அரசின் தலையீடு இல்லாததை தெரிந்து கொண்டு தடை உத்தரவை அதிரடியாக நீக்கியுள்ளது.