கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்லெட்ஜிங் தான். அந்தளவிற்கு எதிரணி வீரர்களின் கவனத்தை, வம்பிழுத்து கிண்டல் செய்து சிதறடிப்பதில் வல்லவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் விக்கெட் கீப்பிங் செய்யும்போது, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா ஆகிய இந்திய வீரர்களை கிண்டல செய்து வம்பிழுக்க, ஆஸ்திரேலிய அணிக்கு அவர்கள் பாணியிலேயே தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பண்ட். வம்பிழுப்பதில் வல்லவர்களான ஆஸ்திரேலிய வீரர்களுக்கே, அந்த விஷயத்தில் கடும் சவாலளித்தார் ரிஷப். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஸ்லெட்ஜிங் ஜாலியாக நடந்து முடிந்த நிலையில், ஆஷஸ் தொடரில் படு சீரியஸாகவும் மோசமாகவும் இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன், மேத்யூ வேட் ஆகியோர் பென் ஸ்டோக்ஸை அவர் 2017ல் சரக்கடித்துவிட்டு சண்டை போட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்தனர். மேத்யூ வேட் தான் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்தார். பதிலுக்கு ஸ்டோக்ஸும் வார்னரை கெட்ட வார்த்தையில் திட்டினார். 

ஆஸ்திரேலிய வீரர்களின் ஸ்லெட்ஜிங்கை கண்ட முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் செம கடுப்பாகி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சேப்பல், ஸ்லெட்ஜிங் சம்பவங்கள் நடந்தால் கண்டிப்பாக அம்பயர்கள் குறுக்கிட்டு தடுக்க வேண்டும். ஸ்லெட்ஜிங் சம்பவங்கள் பெரிதாகும்போதெல்லாம், அதுவும் ஆட்டத்தின் ஒரு அங்கம் என்று சமாதானம் சொல்லப்படுகிறது. ஸ்லெட்ஜிங்கை இப்படியெல்லாம் நியாயப்படுத்தக்கூடாது. இதெல்லாம் குப்பைக்கூளம் என்று கடுமையாக விமர்சித்தார் இயன் சேப்பல். 

பேட்ஸ்மேன் பேட்டிங் ஆடும்போது அமைதியான சூழல் இருக்க வேண்டும். இதுவே, நான் பேட்டிங் ஆடும்போது மேத்யூ வேட் எனது கவனத்தை சிதறடித்திருந்தால், அப்போது அம்பயர் குறுக்கிட்டு தடுக்காவிட்டால், நானே அவரிடம் சென்று கொஞ்சம் மூடிகிட்டு இருங்கள் என்று சொல்லியிருப்பேன். கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள், அம்பயர்கள், பயிற்சியாளர் என அனைவருமே ஸ்லெட்ஜிங் ஆட்டத்தின் ஒரு அங்கம் என கருதுகின்றனர். ஆனால் கண்டிப்பாக அது ஆட்டத்தின் அங்கமல்ல என்று இயன் சேப்பல் தெரிவித்தார்.