கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத இந்த சூழலில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் உரையாடுகின்றனர். 

முன்னாள் வீரர்கள் தங்களது உலக லெவனை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பிஷப், கடந்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இருவரும் சிறந்த தேர்வு. ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட சில காலத்திலேயே தனது முதல் இரட்டை சதத்தை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்தார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரட்டை சதமடித்த ரோஹித் சர்மா, அதன்பின்னர் 2014ல் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனை படைத்தார். அதன்பின்னர் 2017ல் மீண்டும் ஒரு இரட்டை சதம் அடித்தார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே நெருங்கக்கூட முடியாத வகையில் 3 இரட்டை சதங்களை விளாசியவர் ரோஹித். இதுவரை மொத்தம் 29 சதங்களை விளாசியுள்ளார். 

அதேபோல டேவிட் வார்னரும் மிரட்டலான தொடக்க வீரர். ஆஸ்திரேலிய அணிக்காக பல அருமையான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்தவர். கண்டிப்பாக கடந்த பத்தாண்டின் சிறந்த தொடக்க வீரர்களில் வார்னரும் ஒருவர். 

மூன்றாம் வரிசை வீரர் விராட் கோலி. இயன் பிஷப் மட்டுமல்ல; வேறு யாராக இருந்தாலும் மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு யாரையும் யோசித்துக்கூட பார்க்கமாட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை நாயகனாக திகழும் விராட் கோலி தான் மூன்றாம் வரிசை வீரர். 

நான்காம் வரிசையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸ், ஐந்தாம் வரிசையில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லரையும் இயன் பிஷப் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்த பிஷப், அவரையே பத்தாண்டின் சிறந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன் மற்றும் மலிங்கா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். மிட்செல் ஸ்டார்க், 2015 உலக கோப்பையின் தொடர் நாயகன். ஸ்டெய்ன் மற்றும் மலிங்கா ஆகிய இருவரும் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கியவர்கள். பவுலிங்கில் நல்ல வேகத்துடன் ஸ்விங்கும் செய்யக்கூடியவர் ஸ்டெய்ன். தனது வேகமான ஸ்விங் பவுலிங்கால் டாப் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டார் ஸ்டெய்ன். மலிங்கா, நல்ல வேரியேஷனில் அருமையாக வீசக்கூடியவர். குறிப்பாக டெத் ஓவர்களில் அருமையாக வீசி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்தவர். 

ஸ்பின்னராக ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கானை இயன் பிஷப் தேர்வு செய்துள்ளார். 

இயன் பிஷப்பின் பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரோஸ் டெய்லர், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், லசித் மலிங்கா, ரஷீத் கான்.