இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது. 

288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப்பும் ஹெட்மயரும் இணைந்து மிக அருமையாக ஆடி சதமடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். ஹெட்மயரின் அதிரடியான சதம் மற்றும் ஹோப்பின் பொறுப்பான சதம் ஆகியவற்றின் விளைவாக 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

ஹெட்மயரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. தொடக்கம் முதலே அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்த ஹெட்மயர், இந்தியாவுக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். சதமடித்த பிறகு, தீபக் சாஹரின் பந்தை தூக்கியடித்து லாங் ஆனில் ஒரு கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். இதையடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய ஷாட்டுகளை ஆடி விரைவில் ஸ்கோர் செய்தார் ஹெட்மயர். 

ஹெட்மயர் டாப் ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்தபோது, சிக்கியவர் ஜடேஜா. ஜடேஜா வீசிய 36வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அதில், ஐந்தாவது பந்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது சிக்ஸர், ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றது. ஹெட்மயரின் அந்த ஷாட்டை கேப்டன் கோலி உட்பட அனைத்து இந்திய வீரர்களும் வியந்து பார்த்தனர். அந்த வீடியோ இதோ.. 

போட்டிக்கு பின்னர் தனது இன்னிங்ஸ் குறித்து பேசிய ஹெட்மயர், இதுதான் தான் அடித்ததிலேயே ஸ்பெஷலான மற்றும் சிறந்த சதம் என்று ஹெட்மயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கிற்கு சாதகமான மற்றும் மெதுவான பிட்ச்சான சென்னை சேப்பாக்கத்தில் இப்படியொரு இன்னிங்ஸ் ஆடுவது உண்மையாகவே ஸ்பெஷலான இன்னிங்ஸ்தான்.