இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், ஃபில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஃபில் சிம்மன்ஸ், இந்த போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாகவும், ஆனால் விஷயங்களை தொகுத்தளித்த விதத்திலும் கம்யூனிகேஷன் திறனிலும் சாஸ்திரி சிறந்து விளங்கியதால் அவரை தேர்வு செய்ததாக கபில் தேவ் தெரிவித்தார். 

ரவி சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்துள்ளது. ஆனால் ஆலோசனைக்குழுவில் உள்ள கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகிய மூவருமே ஒருமனதாக சாஸ்திரியை தேர்வு செய்துள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்ததற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூவருமே சாஸ்திரிக்குத்தான் அதிக மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். 

கீழ்க்கண்டவை தான் அந்த அளவுகோல்கள்:

1. பயிற்சி திட்டங்கள்

2. பயிற்சியாளர் அனுபவம்

3. பயிற்சியாளராக செய்த சாதனைகள்

4. கம்யூனிகேஷன் திறன்

5. நவீன பயிற்சிமுறை குறித்த அறிவு

இந்த 5 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதில் டாப்பில் இருந்த ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.