இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். 

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. கடைசி போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டி டிராவானாலும் இந்தியா தான் தொடரை வெல்லும். ஆனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இந்திய அணி வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளது.

ஜூலை 1ம் தேதி பிர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி வீழ்த்திய இங்கிலாந்து அணி அல்ல இது. இப்போது பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில், பிரண்டன் மெக்கல்லமின் வழிகாட்டுதலில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிவரும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் போட்டி என்றாலே குதூகலம் தான். அதுவும் இங்கிலாந்தில் ஆடுவது மிகுந்த உற்சாகமாக இருக்கும். இது டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் மிக முக்கியமான போட்டி. இங்கிலாந்தில் ஸ்டேடியம் முழுக்க திரள்வார்கள். 

இங்கிலாந்து அணி இப்போதைக்கு அபாரமாக ஆடிவருகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி வீழ்த்திய இங்கிலாந்து அணி அல்ல இது. இது வித்தியாசமான இங்கிலாந்து அணி. நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி சிறந்த போட்டியாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க, விளையாட, பயிற்சி செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் டிராவிட்.