இந்திய அணியின் மூன்று விதமான அணிகளுக்கும் முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் என்பதை தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் உறுதி செய்துவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான மூன்று விதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் மாற்று விக்கெட் கீப்பரே கிடையாது. டெஸ்ட் அணியில் சஹா மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். 

காயத்தால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சஹா, காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை பெற்றிருப்பதால், மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஹா காயத்தால் ஆடமுடியாமல் போனதால் தான் கடந்த ஆண்டு நடந்த  இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்தார். 

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடியதால் ரிஷப் பண்ட்டின் இடம் இந்திய அணியில் உறுதியாகிவிட்டது. ரிஷப் பண்ட் தான் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் என்பதை உறுதி செய்துவிட்டால், பின்னர் சஹா அணியில் எதற்கு? என்று மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து ஹர்ஷா போக்ளே பதிவிட்டுள்ள டுவீட்டில், சஹா சிறந்த விக்கெட் கீப்பர் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதை தேர்வுக்குழு உறுதி செய்துவிட்டது. ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பராக ஆடப்போகிறார் என்றால், 15 பேர் கொண்ட அணியில் சஹாவையும் எடுத்ததில் எந்த பயனும் இல்லை என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.