ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் 3 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

புள்ளி பட்டியலில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே தோனி மற்றும் ரோஹித் சர்மா என்ற இரு உத்தி ரீதியான வலிமையான கேப்டன்களை பெற்றிருப்பதுதான் அந்த அணிகள் வெற்றிகரமாக திகழ காரணம். 

2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஒரு கேப்டனாக இன்னும் தேறவில்லை. அதேநேரத்தில் கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அஷ்வின், கடந்த சீசனிலேயே சிறப்பாக செயல்பட்டார். இந்த சீசனில் இன்னும் அபாரமாக செயல்படுகிறார்.

ஒரு கேப்டனாக, சிறப்பான ஆட்டத்தை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தி, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 4 பந்துகளில் 17 ரன்களை குவித்ததோடு, 2 முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவ்வாறு அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்த நேரத்தில், யாருக்கு, எப்போது யாரை பந்துவீச வைக்க வேண்டும் என்பதை அறிந்து சிறப்பாக செயல்படுகிறார். உத்தி ரீதியாக சிறந்து விளங்குகிறார். 

இந்நிலையில் அஷ்வினின் கேப்டன்சியை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே புகழ்ந்து பேசியுள்ளார். அஷ்வின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த ஹர்ஷா போக்ளே, பஞ்சாப் அணி சிறப்பாக ஆடுகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அஷ்வினின் கேப்டன்சி. இந்த சீசனில் தோனிக்கு நிகரான சிறந்த கேப்டனாக அஷ்வின் திகழ்கிறார். இக்கட்டான மற்றும் நெருக்கடியான சூழல்களில் எந்தவித தயக்கமுமின்றி அதிரடியான நல்ல முடிவுகளை எடுக்கிறார் அஷ்வின். ஒரு கேப்டனாக முடிவுகளை எடுக்க அஷ்வின் தயங்குவதே இல்லை. பஞ்சாப் அணியில் இருக்கும் வீரர்களை வைத்துக்கொண்டு அந்த அணி பிளே ஆஃபிற்கு முன்னேறினால், அந்த வெற்றி அஷ்வினையே சேரும் என்று ஹர்ஷா போக்ளே புகழ்ந்துள்ளார்.