IPL 2023: செம டேலண்ட்.. பெருகும் ஆதரவு..! அதிரடி மன்னனுக்கு இந்திய அணியில் இடம்..?
சஞ்சு சாம்சன் தனது இந்திய டி20 அணியில் கண்டிப்பாக எப்போதுமே இருப்பார் என்று ஹர்ஷா போக்ளே கருத்து கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் தான் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல்லில் 148 போட்டிகளில் ஆடி 3683 ரன்களை குவித்துள்ள சஞ்சு சாம்சன், 11 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் ஆடி முறையே 330 மற்றும் 301 ரன்கள் அடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது விமர்சனத்துக்குள்ளாகிறது.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்டகாலமாக ஆடிவரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் சஞ்சு சாம்சன். ஃபைனலில் குஜராத்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
இந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 55 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 32 பந்தில் 60 ரன்கள் அடித்து, ஒரு கேப்டனாக பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு உதவினார். கேப்டன்சியிலும் மிகவும் நிதானமாக செயல்பட்டு அனைவரையும் கவர்கிறார்.
சஞ்சு சாம்சன் தோனியை போலவே தனது திறமை மீது நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ஆடவைக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.
கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தனது டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு எப்போதுமே இடம் உண்டு என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.