2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான திறமையாலும், சிறப்பான பங்களிப்பாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று விதமான அணிகளிலும் நிரந்தர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

முகுதுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பெரிதாக ஆடவேவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பெங்களூருவில் நடந்த போட்டியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை.

இதற்கிடையே, செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக திடீரென புகைப்படங்களை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா, லாக்டவுனில் எளிய முறையில் திருமணம் நடந்ததாகவும் தனது மனைவி நடாஷா கர்ப்பமாக இருப்பதையும் கடந்த 2 மாதங்களுக்கு முன் உறுதி செய்தார். 

கொரோனாவால் இந்திய அணி கடந்த 5 மாதங்களாக எந்த போட்டியிலும் ஆடவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குவது உறுதியாகியுள்ளது.  ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் ஹர்திக் பாண்டியா, அதற்காக தயாராகிவருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. 

ஹர்திக் பாண்டியா தனது ஆண்குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த செய்தியை தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது. லாக்டவுன் சமயம் என்பதால் கர்ப்பமாக இருந்த தனது மனைவியுடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் தனது குழந்தையுடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்திருக்கிறது.