உலக கோப்பை  மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது. 

உலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கோலி, ரோஹித், தவான், தோனி, கேதர், ஹர்திக், குல்தீப், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய 11 பேரும் உறுதி. இவர்கள் தவிர ராகுல், ரிஷப், ஜடேஜா, விஜய் சங்கர் ஆகிய 4 பேரும் இடம்பெறும் பட்சத்தில் நான்காவது ஃபாஸ்ட் பவுலரை அணியில் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். 

ஆனால் உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் கண்டிப்பாக தேவை என்பதால், ஹர்பஜன் சிங் ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார். விக்கெட் கீப்பர் தோனிக்கு ஸ்பெஷலிஸ்ட் மாற்று தேவையில்லை. தோனி காயம் ஏதும் அடையாத பட்சத்தில் அவர்தான் விக்கெட் கீப்பராக இருப்பார். அதனால் மாற்று விக்கெட் கீப்பர் என்று ஒருவர் தேவையில்லை. தோனிக்கு முதுகுப்பகுதியில் பிரச்னை இருந்தாலும் அது பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக எப்படி சமாளித்து ஆடவேண்டும் என்பதை தோனி அறிவார். அதனால் தோனிக்கு மாற்று தேவையில்லை. ஒருவேளை தோனி ஆடமுடியாத பட்சத்தில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பிங் செய்யவைக்கலாம்.

மாற்று விக்கெட் கீப்பருக்கு ஒரு இடத்தை வீணடிப்பதைவிட நான்காவது ஃபாஸ்ட் பவுலரை அணியில் எடுப்பதுதான் முக்கியம். ஆர்சிபி அணியில் ஆடும் நவ்தீப் சைனியை நான்காவது ஃபாஸ்ட் பவுலராக அணியில் எடுக்க வேண்டும். அவர் ஐபிஎல்லில் நன்றாக வீசுகிறார் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ரஞ்சி போட்டிகளிலும் அபாரமாக வீசி வெற்றி நாயகனாக திகழ்ந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக வீசியுள்ளதால், சைனியை உலக கோப்பைக்கு நான்காவது ஃபாஸ்ட் பவுலராக எடுக்கலாம் என்று ஹர்பஜன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.