உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பை இறுதி போட்டியை விட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளுமே கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக போராடும். 

இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அதனால் முதன்முறையாக உலக கோப்பையில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், இதுவரை வைத்திருக்கும் சாதனையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற தீவிரத்தில் இந்திய அணியும் உள்ளன. 

இந்திய அணி வலுவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தாலும், இந்தமுறை அது நடக்க வாய்ப்பில்லை. ஆசிய கோப்பையிலும் இந்திய அணியிடம் மரண அடி வாங்கியது பாகிஸ்தான். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதேநேரத்தில் சர்ஃபராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி அதள பாதாளத்தில் கிடக்கிறது. 

இந்திய அணி வரும் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை தொடர்ந்து ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி அளவிற்கு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி முக்கியமானது கிடையாது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஊடகங்களால் வேண்டுமென்றால் பூதாகரப்படுத்தப்படலாம். ஆனால் கிரிக்கெட் உலகில் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - இங்கிலாந்து போட்டிதான். 

தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்திவிடும். பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் என்று யாருமே இல்லை. அதேநேரத்தில் இந்திய அணியில் 11 வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்தான். இந்த பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியாது. இந்திய அணி நிறைய அனுபவ வீரர்களையும், சிறந்த வீரர்களையும் கொண்டுள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.