சிஎஸ்கே அணிக்கு இன்னும் தோனியே கேப்டனாக இருப்பதாகவும், ரவீந்திர ஜடேஜா முன்வந்து கேப்டன்சி பொறுப்பை உணர்ந்து அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி 4 முறை சிஎஸ்கேவிற்கு கோப்பையை வென்று கொடுத்த தோனி, 15வது சீசனுக்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகினார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
இந்த சீசனில் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடிவருகிறது. ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசன் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக தொடங்கவில்லை. முதல் 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்தது சிஎஸ்கே. கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.
தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும், சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதும், களத்தில் இக்கட்டான, நெருக்கடியான சூழல்களில் கேப்டன் ஜடேஜாவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அதை மிகவும் நெருக்கடியான அல்லது தேவைப்படும் நேரங்களில் மட்டும் செய்தால் நல்லது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஃபீல்டிங் செட்டப் செய்தார். வீரர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். கேப்டன் ஜடேஜா பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். தோனியின் இந்த செயலை அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஹர்பஜன் சிங்கும் இதுகுறித்து பேசியுள்ளார். ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்று முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், தோனி தான் இன்னும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜடேஜா பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்வதை பார்த்தேன். பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டு அணி வீரர்களை வழிநடத்துவதும் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே தோனி தான் கேப்டன்சி செய்கிறார். இது தோனிக்கு தலைவலி. ஜடேஜா தன்னம்பிக்கை வாய்ந்தவர்; மிகச்சிறந்த திறமைசாலி. அவர் ஒரு கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
