சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ எட்டிய நிலையில், கொரோனாவிற்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், தனிமைப்படுதலும் சமூக விலகலுமே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி என்பதால், கொரோனா பாதிப்பிற்குள்ளான அனைத்து நாடுகளுமே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இப்போதைக்கு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமே முடங்கியுள்ளது. 

மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாதது, வியப்பாகத்தான் உள்ளது. உலகளவில் எத்தனையோ மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் இருந்தும் கூட, இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்ற சந்தேகமும் பொதுவெளியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில், 2018ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான, "My Secret Terrius"  என்ற வெப்சீரிஸின் முதல் சீசனில் 10வது எபிசோடில், கொரோனா வைரஸ் குறித்த உரையாடல் வருகிறது. அதில், மருத்துவர் ஒருவர் நோயாளியிடம், கொரோனா வைரஸ் இருப்பதாகவும், அதற்கு மருந்து எதுவும் இதுவரை இல்லை என்றும், அந்த வைரஸ் நேரடியாக நுரையீரலை பாதிக்கும் என்றும் கூறுவதாக ஒரு காட்சி இடம்பெறுகிறது. 

இந்த வெப்சீரிஸ், ஏற்கனவே இந்த வைரஸ் குறித்து இருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அந்த சந்தேகம், இந்த வெப் சீரிஸை கண்ட ஹர்பஜன் சிங்கிற்கு வலுத்துள்ளது. அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்பஜன் சிங், 2018லேயே இந்த வெப்சீரிஸில் கொரோனாவை பற்றி பேசியிருக்கிறார்கள். இப்போது நாம் 2020ல் இருக்கிறோம். கொரோனாவின் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறோம். இந்த வீடியோவில் 53வது நிமிடத்தை பாருங்கள்.. அதிர்ச்சியாக இருக்கிறது. இது திட்டமிட்டு பரப்பப்பட்டதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். அந்த வீடியோ இதோ...