உலக கோப்பை அணியில் தனக்கான இடத்தை விஜய் சங்கர் உறுதி செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஒருவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. நாக்பூர் மைதானத்திற்கு இந்த ஸ்கோர் குறைவுதான். எனினும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தினர். 

குல்தீப், கேதர், ஜடேஜா ஆகிய மூவரும் மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசினர். பும்ராவும் ஷமியும் டெத் ஓவர்களை சிறப்பாக வீசினர். விஜய் சங்கர் 10வது ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார். அதன்பிறகு அவருக்கு பவுலிங்கே வழங்கப்படவில்லை. பும்ரா மற்றும் ஷமியின் ஓவர்கள் 49 ஓவர்களில் முடிந்துவிட கடைசி ஓவரை விஜய் சங்கர் வீசியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசிய விஜய் சங்கர், கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதுவரை பேட்டிங்கில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுவந்த விஜய் சங்கர், நேற்றைய போட்டியில் தன்னால் இக்கட்டான சூழலில் பவுலிங்கும் சிறப்பாக வீசமுடியும் என்று நிரூபித்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோது ராயுடுவுடன் சேர்ந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய விஜய் சங்கர், நேற்றைய போட்டியில் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினார். எனினும் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் சிறப்பாக பவுலிங் போட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இந்த வெற்றி இந்திய அணிக்கு 500வது ஒருநாள் போட்டி வெற்றி. 500வது வெற்றியில் முக்கிய பங்காற்றி வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். வரலாற்று சிறப்புமிக்க இந்திய அணியின் வெற்றியில் விஜய் சங்கரின் பங்களிப்பு அளப்பரியது.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணியில் பரிசீலனையில் இருக்கும் வீரர்கள் இந்த தொடரில் பரிசீலிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், விஜய் சங்கர் அருமையாக ஆடி தனது பெயரை ஈசியாக புறந்தள்ள முடியாதபடி செய்துவிட்டார். இதற்கு முன்னால் விஜய் சங்கரை பரிசீலிக்காவிட்டாலும் இப்போது பரிசீலித்தே தீர வேண்டும். ராயுடு நான்காம் வரிசையில் சொதப்பிவரும் நிலையில், விஜய் சங்கரை அந்த வரிசையில் இறக்கினால் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். 

நான்காம் வரிசை வீரர் குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்துவரும் நிலையில், விஜய் சங்கரைக்கூட அந்த இடத்திற்கு பரிசீலிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், விஜய் சங்கர் உலக கோப்பையில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.